இந்திய குடும்பங்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்: ஜெரோதா சிஇஓ நிதின் காமத் வலியுறுத்தல்
பங்கு வர்த்தக நிறுவனம் ஜெரோதா (Zerodha) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத், இந்தியாவில் உள்ள பெருமளவு தங்கத்தை பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“இந்திய குடும்பங்களிடம் சுமார் 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கம் உள்ளது என உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. இந்த அளவிலான தங்கம் தற்போது பயன்பாடு இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.
இதே சமயம், பங்கு முதலீடுகள் மற்றும் நிதி சந்தைகள் வளர்ச்சிக்கான முக்கிய மூலதனத்தை வழங்குகின்றன. எனவே, தங்க கடன்களை (Gold Loans) தாண்டி, இந்த தங்கத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதற்கான புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
இதனுடன், 1996 முதல் 2025 வரையிலான தங்கத்தின் வருமான விகிதம் மற்றும் நிப்டி 500 குறியீட்டின் வருவாய் ஆகியவற்றை ஒப்பிடும் ஒரு விளக்கப்படத்தையும் நிதின் காமத் பகிர்ந்துள்ளார்.
உலக தங்கத்தில் சுமார் 14% பங்கு இந்தியாவுக்கே சொந்தம். அதில் இந்திய குடும்பங்களிடம் மட்டுமே 25,000 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 56% ஆகும்.
எச்எஸ்பிசி குளோபல் சமீபத்திய அறிக்கையில், இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்க இருப்பு, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் முதல் 10 நாடுகளின் மொத்த தங்க கையிருப்பைவிட கூட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) 876.18 டன் தங்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.