மியான்மரில் ராணுவ குண்டு வீச்சு: குழந்தைகள் உட்பட 40 பேர் பலி
மியான்மர்: மியான்மர் ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் குழந்தைகள் உட்பட குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
2021-ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து, ராணுவம் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து மியான்மரில் உள்நாட்டு மோதல்கள் தீவிரமாக நீடித்து வருகின்றன. ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பவுர்ணமி தினத்தை முன்னிட்டு மத்திய மியான்மரில் உள்ள சவுங் யூ நகரில் நூற்றுக்கணக்கான புத்த மதத்தினர் கூடிவிழா கொண்டாடினர். அப்போது ராணுவம் பாராகிளைடர் வழியாக வானில் இருந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல்.
இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 40 பேர் உயிரிழந்ததுடன், 80 பேர் கடுமையாக காயமடைந்தனர். மேலும் பலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
குண்டுவீச்சு குறித்து முன்னரே தகவல் கிடைத்ததால், பலர் அங்கிருந்து தப்பியோடியதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பொதுமக்களை குறிவைத்து குண்டு வீச்சு நடத்துவது போர் குற்றமாக கருதப்பட வேண்டும் என அவை வலியுறுத்தியுள்ளன.