விளையாட்டை வாழ்க்கை மேம்பாட்டுக்காக மாற்ற வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
தஞ்சாவூர்: “விளையாட்டை வெறும் விளையாட்டாக அல்லாது, வாழ்க்கை மேம்பாட்டுக்கான கருவியாகக் காண வேண்டும்” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான 66வது குடியரசு தின தடகளப் போட்டி தொடக்க விழா இன்று (அக்.29) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், முரசொலி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:
“இந்திய அளவில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை முன்னணியில் நிறுத்தும் நோக்கில் துணை முதல்வர் இடைவிடாது முயன்று வருகிறார். இப்போட்டியில் 38 மாவட்டங்களிலிருந்து 6,358 மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாநிலம் முழுவதும் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.
அவர் மேலும்,
“பள்ளி கல்வித் துறை மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு முதல்வர் வலியுறுத்தியபடி, விளையாட்டை வாழ்க்கை முன்னேற்றத்தின் ஓர் அங்கமாகக் காண வேண்டும்,” என தெரிவித்தார்.
மூன்று நாட்கள் மாணவிகளுக்கும், அடுத்த மூன்று நாட்கள் மாணவர்களுக்கும் நடைபெறும் இந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வெல்லும் போட்டியாளர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு தயாராகப் படைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.