திமுக எதிர்க்கட்சியாக இருப்பதுதான் தமிழக நலனுக்கு சிறந்தது: பி.ஆர். பாண்டியன்
மதுரை: திமுக எதிர்க்கட்சியாக இருப்பதுதான் தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நன்மை என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற தென் மண்டல விவசாயிகள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர்,
“திமுக அரசு விவசாயிகள் விரோதமாக செயல்படுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக இருப்பதாக கூறியும், சுற்றுச்சூழல் துறை ராமநாதபுரத்தில் ஒஎன்சிஜிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்,” என்றார்.
அவர் மேலும்,
“முல்லைப்பெரியாறு அணை நீர் மேலாண்மையில் திமுக அரசு கேரளாவுக்கு சாதகமாக நடந்துகொள்கிறது. ரூல் கர் வ் முறையை அனுமதிப்பதால் ஐந்து மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக அரசு உச்சநீதிமன்றம் வழங்கிய உரிமையையே இழந்துவிட்டது,” என குற்றஞ்சாட்டினார்.
நில ஒருங்கிணைப்பு சட்டம் குறித்து பேசும் போது, “இந்த சட்டம் விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும் கார்ப்பரேட் ஆதரவுச் சட்டமாக மாறியுள்ளது. விளைநிலங்களை அழித்து சிப்காட் அமைக்க திமுக அரசு முன்வந்துள்ளது,” என்றார்.
டிசம்பர் மாதத்தில் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பயணம் நடத்தப்படும் என்றும், “திமுக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், அதற்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்,” என எச்சரித்தார்.
முதல்வர் குறித்து அவர் கூறுகையில்,
“முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விவசாயிகளுக்கு பாதுகாப்பு இருந்தது. ஆனால் ஆட்சியில் வந்த பின், விவசாயிகள் பாதுகாப்பற்ற நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். எனவே திமுக எதிர்க்கட்சியாக இருப்பதுதான் தமிழகத்தின் நலனுக்கே நல்லது,” என்றார்.
அத்துடன், “தவெக தலைவர் விஜய், விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து குரல் கொடுத்தது வரவேற்கத்தக்கது. விவசாயிகளுக்காக போராடும் யாரையும் நாங்கள் ஆதரிப்போம்,” எனவும் தெரிவித்தார்.
முடிவாக, “திமுக மக்களை அல்ல, கூட்டணிக் கட்சிகளை நம்பி ஆட்சி நடத்துகிறது. மக்களில் திமுகக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருகிறது. அதனால் பிரதமருக்கு ஆதரவு உயரும் நிலை உருவாகியுள்ளது,” என பி.ஆர். பாண்டியன் கூறினார்.