திமுக, அதிமுக வாக்குறுதிகளால் ‘டேக் ஆஃப்’ ஆகாத மதுரை விமான நிலையம்!
மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக மாற்றுவோம் என்ற வாக்குறுதி கடந்த இருபது ஆண்டுகளாக திமுக, அதிமுக இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இடம்பெற்று வந்தாலும், அந்த கனவு இன்னும் நனவாகவில்லை. இதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அதே வாக்குறுதி வழங்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதை நீளம் 7,500 அடி மட்டுமே. இதனால், பெரிய ரக சர்வதேச விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை உள்ளது. இதை 12,500 அடியாக நீட்டித்து, விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக பேச்சிலேயே சிக்கித் தவிக்கிறது.
அதிமுக, திமுக இரு ஆட்சிகளிலும் திட்டம் நடைமுறைக்கு வராததோடு, நிலம் கையகப்படுத்தும் பணி கூட நிறைவு பெறவில்லை. இதற்கு காரணமாக, “மதுரைக்கு முன்னுரிமை கொடுத்தால் திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்கள் பாதிக்கப்படும்” என்ற உள்கட்சித் தயக்கம் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், மதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. அதில் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது பழனிவேல் தியாகராஜன், “விரிவாக்கத்துக்குத் தேவையான 615 ஏக்கர் நிலத்தில் 150 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலம் உள்ளது; மீதியை மாநில அரசு கையகப்படுத்தி ஒப்படைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கை விரைவில் முடியும்” என்று தெரிவித்தார். ஆனால் அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கடந்தும் திட்டம் முன்னேறவில்லை.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, “மதுரை விமான நிலையம் தொடர்பாக திமுக அரசு வெறும் வாக்குறுதி அளித்ததிலேயே முடிந்துவிட்டது” என குற்றம்சாட்டியுள்ளார்.
மற்றொரு பக்கம், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விளக்கமளிக்கையில், “ஓடுபாதை நீட்டிப்பு பகுதியில் குண்டாறு கால்வாய் இருப்பதால் மாற்று வழி திட்டம் தீட்டப் பரிந்துரைத்துள்ளேன். நிலம் கையகப்படுத்தும் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது,” என கூறினார்.
இருப்பினும், மக்கள் பார்வையில் — மதுரை விமான நிலையம் ‘டேக் ஆஃப்’ ஆகாதது அரசியல் வாக்குறுதிகள் தரையில் இறங்காததற்கே சான்று எனவே சொல்லப்படுகிறது.