பள்ளிக்கரணை சதுப்பு நில குடியிருப்பு அனுமதி ரத்து கோரி அதிமுக சார்பில் பொதுநல மனு
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் அமைக்க சிஎம்டிஏ வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி, அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து, “சதுப்பு நிலத்தில் அல்லாது அதனுடன் ஒட்டிய தனியார் பட்டா நிலத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது,” என்று அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், அந்த அனுமதியை ரத்து செய்யவும், மேலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றிய ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் எந்தவித கட்டுமான பணிகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்றும் கோரி, அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி சார்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ்செல்வன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“சுற்றுச்சூழலுக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பாதுகாப்பு பிரதேசமாக அறிவித்துள்ள பகுதிக்கு தமிழக அரசு தனது அதிகார எல்லையை மீறி அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கெனவே குப்பை கொட்டுதல், ஐடி நிறுவன கட்டுமானங்கள் ஆகியவற்றால் அந்த சதுப்பு நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,” என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.