தென்காசி மாணவி பிரேமாவுக்கான ‘கலைஞர் கனவு இல்லம்’ பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் பேசிய தென்காசி மாணவி பிரேமாவுக்காக அரசு கட்டி வரும் ‘கலைஞர் கனவு இல்லம்’ பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (29.10.2025) நேரில் பார்வையிட்டார்.
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, தென்காசி மாவட்டம் கழுநீர்குளம் ஊராட்சியில் மாணவி பிரேமாவின் குடும்பத்திற்காக ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்னேற்றப் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.
கடந்த மாதம் சென்னையில் நடந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில், மழை காலங்களில் ஒழுகும் வீட்டில் பெற்றோருடன் வசிப்பதாக மாணவி பிரேமா உணர்ச்சிவசப்பட பேசினார். அவரது உரை அனைவரின் மனதையும் நெகிழச்செய்தது.
அதையடுத்து, 24 மணி நேரத்துக்குள், முதல்வர் ஸ்டாலின் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் பிரேமா குடும்பத்துக்கு புதிய வீடு வழங்க உத்தரவிட்டார். அதன்படி, பிரேமாவின் தாயார் முத்துலெட்சுமி பெயரில் வீட்டுக்கட்டுமான ஆணை அடுத்த நாளே பிறப்பிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் சமூக வலைதளத்தில் முதல்வர் கூறியிருந்தார்:
“ஒழுகும் வீட்டில் தந்தையார் இருப்பாரே என்ற கவலை இனி பிரேமாவுக்கு வேண்டாம். உங்களுக்காக புதிய வீடு கட்டப்படவுள்ளது. இது உங்களது தந்தையின் கனவின் நிறைவேற்றம்.”
இந்நிலையில், தென்காசி மாவட்ட அரசு விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலின், கழுநீர்குளம் சென்று, பிரேமாவின் பெற்றோர் சு.ராமசாமி மற்றும் முத்துலெட்சுமி ஆகியோரை சந்தித்து, கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
மேலும், பிரேமாவுடன் தொலைபேசி வழியாக பேசிக் கொண்ட முதல்வர்,
“உங்கள் வீடு கட்டி கொண்டிருக்கும் இடத்தில்தான் நான் நிற்கிறேன். இன்னும் இரண்டு மாதங்களில் இது முழுமையாக முடிவடையும்,”
என்று கூறியுள்ளார். அதற்கு மாணவி பிரேமா, முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, ஆணையர் பா. பொன்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.