மெட்ரோ ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய தொழில்நுட்பம் — ரூ.48 கோடியில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் ‘ஆண்டி டிராக் ப்யூச்சர்’ எனப்படும் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.48.33 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் கதவுகளில் துணி, பைகள் போன்றவை சிக்கி விபத்துகள் ஏற்படும் சூழலை தவிர்க்கும் வகையில், இந்த புதிய அமைப்பு நிறுவப்பட உள்ளது. தற்போதைய சென்சார் 10 மில்லிமீட்டர் தடிமனுள்ள பொருளை மட்டுமே கண்டறிகிறது. ஆனால் புதிய தொழில்நுட்பம், 0.3 மில்லிமீட்டர் அளவிலான சிறிய பொருளையும் உணர முடியும்.
இந்த அமைப்பை நிறுவும் ஒப்பந்தம் ‘பைவ்லி டிரான்ஸ்போர்ட் ரயில் டெக்னாலஜீஸ் இந்தியா’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் ராஜேந்திரன், மற்றும் தனியார் நிறுவன இயக்குநர் புனீத் மெஹ்ரோத்ரா கையெழுத்திட்டனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
“புதிய ஆண்டி-டிராக் தொழில்நுட்பம், ஒருவர் அல்லது பொருள் கதவுகளில் சிக்கிக்கொண்ட நிலையில் ரயில் நகரத் தொடங்கும்போது உடனடியாக அதைக் கண்டறிந்து, அவசரகால பிரேக் செயல்படுத்தும். அதே நேரத்தில், ஓட்டுநரின் திரையிலும் எச்சரிக்கை தோன்றும். இதனால் விபத்துகள் முழுமையாக தவிர்க்கப்படும்.”
இந்த தொழில்நுட்பம் முதலில் நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் இயங்கும் அனைத்து ரயில்களிலும் நிறுவப்பட உள்ளது.