பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு – முத்தரப்பு தொடரில் இருந்து ஆப்கனிஸ்தான் விலகல்
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனிஸ்தானைச் சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் அணியும் பங்கேற்கவிருந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் (TTP) அமைப்பினருக்கு ஆப்கனிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக குற்றம் சாட்டி, பாகிஸ்தான் ராணுவம் கடந்த வாரம் ஆப்கனில் தலிபான் தளங்களை குறிவைத்து விமானத் தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆப்கனிஸ்தான், பதிலடி தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பும் இரண்டு நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன. எனினும், அதன் பின்னரும் பதற்றம் தொடர்ந்தது.
அத்தகைய சூழலில், பாகிஸ்தான் ராணுவம் ஆப்கனிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் நடத்திய தாக்குதலில், அந்நாட்டைச் சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் — கபீர், சிப்கத்துல்லா, ஹாரூன் — உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,
“பாகிஸ்தான் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் பாக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் மாகாணத் தலைநகர் ஷரானாவில் நடைபெற்ற நட்பு போட்டியில் பங்கேற்று திரும்பியபோது தாக்குதலுக்கு இலக்கானனர். அவர்களின் தியாகம் ஆப்கனிஸ்தான் விளையாட்டு சமூகத்துக்கு பேரிழப்பாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகுகிறோம். அல்லா அவர்கள் ஆன்மாவை உயர்ந்த இடத்தில் அமர்த்துவாராக,” என தெரிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு ஆப்கனிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது X (முன்னாள் ட்விட்டர்) பதிவில்,
“பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமானவை. இவை மனித உரிமைகளைக் கடுமையாக மீறுகின்றன. நமது நாட்டின் கண்ணியம் எல்லாவற்றிலும் மேலானது,”
என்று குறிப்பிட்டுள்ளார்.