காசாவில் பேருந்து மீது இஸ்ரேல் ராணுவ துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி
காசா நகரில் ஒரு பேருந்து மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பாலஸ்தீனிய குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்ததாக காசா சிவில் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் காசா சிவில் பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் கூறியதாவது:
“ஜெய்துன் பகுதியின் கிழக்குப் பகுதியில் இடம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அபு ஷபான் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஜெய்துனில் இருந்த தங்கள் வீடு எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கச் சென்றபோது அவர்கள் தாக்குதலுக்கு இலக்கானனர்,” என்றார்.
இதேவேளை, ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் எச்சரிக்கையாக இருந்த இஸ்ரேல் ராணுவம், எல்லைப் பகுதியான மஞ்சள் கோட்டின் அருகே வந்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தினதாக தெரிவித்துள்ளது. ஆனால் அந்த வாகனம் அச்சுறுத்தும் வகையில் அருகே வந்ததால் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தற்போது இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், இதுவரை பல சிறிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எல்லைப் பகுதியை நெருங்கும் அல்லது கடக்க முயற்சிப்பவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளைத் தேடி வடக்கு காசாவிற்கு திரும்பி வருகின்றனர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போரால் ஏற்பட்ட அழிவின் காரணமாக, பலர் தங்கள் வீடுகளை கண்டுபிடிக்க முடியாமல் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.