“சார் என்றாலே திமுகவுக்கு பயம்” – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சனை
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, “சார்” என்ற வார்த்தை கேட்டாலே திமுக பயந்து போகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
கோவை வந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு அளிக்க கோவை விமான நிலையம் சென்றிருந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ‘சார் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி)’ என்றாலே திமுக அச்சம் அடைகிறது.
வாக்காளர் கணக்கெடுப்பு என்பது நேரு காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. பிஹாரில் 65 லட்சம் மக்களில் 30 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்; மீதமுள்ளவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர்,” என்று கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில் மட்டும் 9,000 வாக்குகள் கூடுதலாக உள்ளன. திமுக அமைச்சர்கள், தாங்களே போலியாக சேர்த்த வாக்காளர்கள் பற்றிய விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளனர்.
தவெக தலைவர் விஜய் வழங்கிய நிதியுதவியை ஒரு பெண் திருப்பி அனுப்பியிருப்பது குறித்து பேசப்படும் நிலையில், சிலர் யாரிடமிருந்தும் உதவி பெறாமல் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த எண்ணத்தில் தான் அந்தப் பெண் பணத்தைத் திருப்பி அனுப்பியிருக்கலாம்,” என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.