‘காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார் விஜய்’ – மாமல்லபுரத்தில் நடந்தது என்ன?
கரூர் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிகழ்வு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அந்த சந்திப்பின் போது விஜய் உணர்ச்சிவசப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், சிலரின் காலில் விழுந்து கதறி அழுததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர், 7 ஆம்னி பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு விஜய் நேற்று மாலை வந்து, ஒவ்வொரு குடும்பத்தாரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் இன்று அதிகாலை அவர்கள் மீண்டும் கரூருக்கு திரும்பினர்.
உயிரிழந்த ஹேமலதா, சாய்லக்ஷனா, சாய்ஜீவா ஆகியோரின் உறவினரான ஆனந்தஜோதி கூறியதாவது:
“விஜய் எங்களை சந்தித்தபோது, ‘என்னை உங்கள் குடும்பத்தின் ஒருவராக நினைத்து மன்னித்து விடுங்கள்’ எனக் கூறி என் தாய் கிருஷ்ணவேணியின் காலில் விழுந்து அழுதார். ‘உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றும் உறுதியளித்தார்.”
மேலும் அவர் தெரிவித்ததாவது:
“கூட்ட நெரிசலில் மயங்கிய என் மகளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் சிகிச்சை தாமதமாகி உயிரிழந்தது என்று கூறியபோது, ‘சிபிஐ விசாரணையில் இதை தெரிவிக்கலாம்’ என்று விஜய் பதிலளித்தார்.”
அதேபோல், மனைவியும் மகளும் உயிரிழந்த சக்திவேல் என்ற நபர் கூறியதாவது:
“விஜய் எனது காலில் விழுந்து கதறி அழுதார். ‘நடந்த விஷயத்துக்கு மன்னித்து விடுங்கள்; நான் எப்போதும் உங்களில் ஒருவனாகவே இருப்பேன். எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்’ என்று கூறினார்.”
பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினர் தெரிவித்ததாவது:
“கரூர் விபத்துக்குப் பிறகு விஜய் உடல் மெலிந்திருந்தார். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ₹5 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எந்த உதவிக்கும் தயாராக இருப்பதாக விஜய் உறுதியளித்தார்.”