சமூக வலைதள அவதூறு பதிவு: ஶ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
ஶ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறான பதிவை வெளியிட்டவரை கைது செய்யக் கோரி, வழக்கறிஞர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் நடத்தினர்.
கோட்டைபட்டி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் சங்க பொருளாளர் சதீஷ்குமார், தனது குடும்பத்தைப் பற்றி முத்துகிருஷ்ணன் எனும் நபர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் வெளியிட்டதாக போலீசில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, முத்துகிருஷ்ணனை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த முத்துகிருஷ்ணன் நெஞ்சு வலியை தெரிவித்ததால், மருத்துவர்கள் சிறைத் தண்டனைக்கான உடல்நலம் சான்றிதழ் வழங்க மறுத்தனர்.
இந்த நிலையில், குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி, விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் ஶ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், ஶ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமை சமணப்படுத்தினார்.