Tamil Nadu SIR | “தவறு செய்யவே உருவாக்கப்பட்ட திட்டம் இது” – சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “எஸ்ஐஆர் (Special Intensive Revision) எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தத் திட்டம் தவறு செய்யவே உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மூன்று நாள் கலைப் போட்டிகள் தொடங்கியன. அரசு மற்றும் அரசு உதவிப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்கின்றனர். வெற்றிபெறும் மாணவர்களுக்கு ‘கலையரசன்’, ‘கலையரசி’ பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.
பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகளைத் தொடங்கி வைத்தபின், செய்தியாளர்களிடம் பேசும் போது அப்பாவு கூறினார்:
“மத்திய அரசு ஒவ்வொரு புதிய திட்டத்தையும் இனிப்பாக விளக்கி மக்களிடம் கொண்டுவருகிறது. ஆனால் பின்னர் அதற்கான நிதியை வழங்காமல் விடுகிறது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மத்திய அரசு, மாநிலத்துக்கு பங்காக நிதி வழங்கி வந்தது. ஆனால் தற்போது அதனை படிப்படியாகக் குறைத்து விட்டது.
பி.எம். ஸ்ரீ உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து விட்டு, பின்னர் நிதியை நிறுத்துவது தவறு. குலக் கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்வித் திட்டத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம். வாக்காளர் பட்டியல் திருத்தத்தை வரவேற்கிறோம், ஆனால் அதை கொண்டு வந்த நபர்கள்மீது நம்பகத்தன்மை இல்லை. இந்த திட்டம் தவறு செய்யவே உருவாக்கப்பட்டுள்ளது.”
அவர் மேலும் கூறினார்:
“மத்திய அரசு பல தவறுகளைச் செய்தும் வெற்றி பெறுகிறது; ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும் மாநில அரசு வெற்றி பெறாது என முடியாது. நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். ஓ.பி.எஸ் கூட அதே கருத்தை பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். நடிகர் விஜய்க்கு ஒரு திட்டமிடப்பட்ட வாழ்க்கை முறை உள்ளது — எப்போது எழுவது, எப்போது நிகழ்ச்சியில் பங்கேற்பது என அனைத்தும் திட்டமிட்டது போல. அதேபோல் அவர் நேற்று நடந்தார்.
அதானி மோடியின் செல்லப் பிள்ளை. எல்.ஐ.சி மட்டும் அல்லாமல், அவர் கேட்பதெல்லாம் மத்திய அரசு வழங்கத் தயார்.
பாமக எம்.எல்.ஏ.க்களுக்கு அங்கீகாரம் வழங்கும் பிரச்சினையில் நான் கடுமையாக இருந்ததால், அன்புமணி என்னை ‘கல் குவாரி காட்பாதர்’ என்று விமர்சித்திருக்கலாம். ஆனால் என் தொகுதியில் கல் குவாரிகள் அதிகம் இருப்பது உண்மை தான்; ஆனால் அவற்றில் ஒன்று கூட என் பெயரிலோ, என் குடும்பத்தினர் பெயரிலோ இல்லை.”