வானிலை முன்னறிவிப்பு: நவம்பர் 3 வரை தமிழகத்தில் மிதமான மழை சாத்தியம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,
இன்று (அக்.28) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல் நாளை (அக்.29) முதல் நவம்பர் 3 வரை தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
புயல் நிலைமை
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான ‘மோந்தா’ புயல் தற்போது தீவிர புயலாக வலுத்து, ஆந்திர கடலோரப் பகுதிகளான காக்கிநாடா அருகே இன்று (அக்.28) மாலை அல்லது இரவு கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 110 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், அரபிக்கடல் பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது.
மாவட்ட வாரியான மழை நிலை (அக்.28)
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வடதமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 30–50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யலாம்.
சென்னை வானிலை
- இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- நாளை (அக்.29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்; சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று (அக்.28) மற்றும் நாளை (அக்.29) தமிழக கடலோரம், புதுச்சேரி, மன்னார் வளைகுடா, குமரி கடலில் மணிக்கு 45–65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
ஆகையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.