திருப்பதி பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் – சிம்ம வாகனத்தில் மலையப்பர் அருள்பாலிப்பு
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. காலை சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மராக மலையப்பர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
புரட்டாசி மாதத்தையொட்டி நடைபெற்று வரும் இந்தப் புனித விழா, கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து திருப்பதி மற்றும் திருமலை முழுவதும் வண்ணத் தோரணங்கள், மலர் அலங்காரம், விளக்குகள் என விழாக்கோலமாக மிளிர்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்தோர், மலையப்பர் தரிசனத்தில் பங்கேற்று ஆனந்தமடைந்தனர்.
நேற்றைய மூன்றாம் நாள் காலை 8 மணி முதல் 10 மணி வரை, உற்சவர் மலையப்பர் சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மராக 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன சேவை முன் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த கலைஞர்களின் நடன, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இரவு, முத்துப் பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக மலையப்பர் பவனி வந்து பக்தர்களை ஆசீர்வதித்தார். சந்திரனுக்குரிய நவரத்தினங்களில் ஒன்றான முத்துக்களால் ஆன பல்லக்கில் மலையப்பர் வீதியுலா வந்தது சிறப்பு.
வாகன சேவையில் தேவஸ்தான ஜீயர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாடவீதிகள் முழுவதும் “கோவிந்தா கோவிந்தா” என முழங்கிய பக்தர்களின் ஆரவாரத்தில், பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் விழா ஆனந்தமாக நிறைவு பெற்றது.