இயக்குநராக அறிமுகமாகும் ஷாலின் ஜோயா – நகைச்சுவை கலந்த ஃபேண்டஸி படம் தயாராகிறது
சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ஷாலின் ஜோயா, இப்போது இயக்குநராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.
இந்தப் புதிய திரைப்படத்தை ஆர்.கே. இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பூஜை மற்றும் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
1990களின் கிராமப்புறத்தை பின்னணியாகக் கொண்ட இந்த திரைப்படம், நகைச்சுவை கலந்த ஃபேண்டஸி கதை என கூறப்படுகிறது. இதில் நக்கலைட்ஸ் புகழ் அருண் மற்றும் பிரிகிடா ஜோடியாக நடித்துள்ளனர்.
மேலும் எம்.எஸ். பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா சுந்தரேசன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில், அஸ்வின் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார்.
மலையாளத் திரைப்பட உலகில் பிரபலமாக உள்ள ஷாலின் ஜோயா, முன்னதாக ‘தி ஃபேமிலி ஆக்ட்’ என்ற மலையாளப் படத்தை இயக்கி பாராட்டைப் பெற்றவர். தமிழில், ஆர்.கே. இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 18வது தயாரிப்பின் மூலம் இவர் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்தப் படம் குறித்து ஷாலின் ஜோயா கூறியதாவது:
“90களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவம் இந்தக் கதையின் மையக்கரு. அது அங்குள்ள மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதை நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி கலந்து சொல்லப் போகிறோம். இப்படத்திற்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ராமகிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தரமான படைப்புகளை நேசிக்கும் தமிழ் ரசிகர்கள் எங்கள் படத்தையும் நிச்சயம் வரவேற்பார்கள் என நம்புகிறோம்,” என அவர் தெரிவித்தார்.