டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி ஆதரவு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆசிய சுற்றுப்பயணத்தில் உள்ள ட்ரம்ப், மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கிடையிலான சமாதான ஒப்பந்தத்துக்கு மத்தியஸ்தம் செய்தார். இதன் மூலம் இரு நாடுகளும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அதையடுத்து ஜப்பான் சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் பிரதமர் சனே தகைச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பின் போது, “ட்ரம்ப் உலக அமைதிக்காக எடுத்த முயற்சிகள் முக்கியமானவை. அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவர் தகுதியானவர்,” என தகைச்சி கூறியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜப்பான் தனியாக அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் உடன் நடந்த சந்திப்பில் தகைச்சி மேலும், “தாய்லாந்து–கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ட்ரம்ப் முக்கிய பங்கு வகித்துள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தமும் வரலாற்றுச் சாதனையாகும்,” என தெரிவித்தார்.
ஜப்பான் பயணத்தை முடித்த ட்ரம்ப், தென் கொரியாவுக்கு புறப்பட்டுள்ளார். அங்கு நடைபெற உள்ள ஆசியா–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், ட்ரம்ப் இதற்காக நீண்டகாலமாக முயற்சி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல், பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளின் தலைவர்கள் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என முன்பே கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஜப்பான் பிரதமரும் அதனை வெளிப்படையாக ஆதரித்துள்ளார்.