உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய எட் கெய்ன் – ஹாலிவுட் சைக்கோவின் உண்மைக் கதாபாத்திரம்
ஹிட்ச்காக் இயக்கிய “சைக்கோ” (1960), “டெக்சாஸ் செயின்சா மாஸக்கர்” (1974), “தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்” (1991) — இவற்றுக்கெல்லாம் ஒரு உண்மைக் கதைத் தூண்டல் உண்டு. அந்த ஊற்றாக இருந்தவர் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த, “ப்ளைன்ஃபீல்ட் பட்சர்” என்று புகழ் பெற்ற சைக்கோ கொலையாளி எட் கெய்ன்.
எட் கெய்ன் வழக்கமான தொடர்க் கொலையாளி அல்ல. அவரால் நிரூபிக்கப்பட்ட கொலைகள் இரண்டு மட்டுமே. ஆனால் கல்லறைகளில் இருந்து சடலங்களை தோண்டி எடுத்து, அவற்றின் உறுப்புகளைக் கொண்டு மனித தோல் உடைகள், முகமூடிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் செய்தது உலகையே பதறச் செய்தது.
தன் தாயின் தீவிர மதவாதக் கட்டுப்பாட்டிலும், தந்தையின் வன்முறையிலும் வளர்ந்த எட், சமூகத்திலிருந்து முழுமையாக பிரிந்த ஒருவனாக மாறினார். தந்தையும் அண்ணனும் மர்மமாக இறந்த பின் தாய் மட்டுமே வாழ்நாளின் அடிப்படை ஆதரவாக இருந்தார். தாய் இறந்ததும், தனிமையில் மனநலம் பாதிக்கப்பட்ட எட் மனித சடலங்களுடன் மோகமடைந்தார்.
1957ல், பெர்னிஸ் என்ற பெண் காணாமல் போன வழக்கில் எட் கைது செய்யப்பட்டார். அவரது பண்ணை வீட்டில் போலீசார் கண்ட காட்சிகள் உலகையே உறைய வைத்தன —
மனித எலும்புகள், தோலால் செய்யப்பட்ட நாற்காலி உறைகள், முகமூடிகள், பெண் தலைகள், உடல் உறுப்புகள் எனப் பல பொருட்கள்.
எட் கொலை செய்தது இரண்டு பெண்களையே எனினும், மற்ற சடலங்கள் கல்லறைகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டவை என விசாரணையில் தெரியவந்தது. மனநலம் பாதிப்பு காரணமாக அவருக்கு மரண தண்டனை வழங்காமல், வாழ்நாள் முழுவதும் மனநல மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
அங்கு 77 வயதில் உயிரிழந்தார் எட் கெய்ன். அவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான “சைக்கோ”, “டெக்சாஸ் செயின்சா மாஸக்கர்” போன்ற படங்கள் இன்று வரை கல்ட் கிளாசிக்காக பார்க்கப்படுகின்றன.
இப்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள புதிய ‘மான்ஸ்டர்’ தொடரின் சீசன், எட் கெய்னின் வாழ்க்கையை கற்பனை கலந்த நிஜ சம்பவங்களோடு மீள்படமாக்கியுள்ளது. ஆனால் தொடரில் எட் கெய்னை புனிதப்படுத்தி காட்டுவதாக உலகம் முழுவதும் விவாதம் எழுந்துள்ளது.
இந்தத் தொடர் மனித மனநிலையின் இருண்ட பக்கங்களையும், தனிமை ஒருவரை எவ்வளவு கொடூரமாக மாற்ற முடியும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.