சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் நாள் ஆட்டங்கள் மழையால் ரத்து
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நேற்று (அக்.27) தொடங்கியது. ஆனால், மோந்தா புயலின் தாக்கத்தால் பெய்த மழை காரணமாக மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால், முதல் நாளில் திட்டமிடப்பட்ட அனைத்து ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.
போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்ததாவது:
இன்று (அக்.28) இரண்டாவது நாளாக ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் நடைபெறும். மொத்தம் 16 ஆட்டங்கள் மதியம் 12 மணி முதல் தொடங்கும். அதேசமயம், இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நாளை (அக்.29) தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முதன்மை ஆடுகளத்தில் நடைபெறும் முக்கிய ஆட்டங்களில்:
- தரவரிசையில் முதலிடத்தில் உள்ள துருக்கியின் ஜெய்னெப் சோன்மெஸ், ரஷ்யாவின் தாத்யானா ப்ரோசோரோவாவை எதிர்கொள்கிறார்.
- ஒலிம்பிக் வெள்ளிப்பதக்க வீராங்கனை குரோஷியாவின் டோனா வெகிக், இந்தியாவின் வைஷ்ணவி அட்கரை எதிர்கொள்கிறார்.
- இந்தியாவின் இளம் வீராங்கனைகள் மாயா ராஜேஷ்வரன் ரேவதி மற்றும் ஸ்ரீவள்ளி பாமிடிபட்டி நேருக்கு நேர் மோதுகின்றனர்.
- நடப்பு சாம்பியனான செக் குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, பிரான்சின் ஆஸ்ட்ரிட் லூ யான் ஃபூன் உடன் மோதுகிறார்.
- தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் பிரான்செஸ்கா ஜோன்ஸ், ஜப்பானின் யமகுச்சியை எதிர்கொள்கிறார்.
- மேலும், இந்தியாவின் சகஜா யமலபள்ளி, இந்தோனேஷியாவின் பிரிஸ்கா நுக்ரோஹோவை எதிர்கொள்கிறார்.
இந்த ஆட்டங்கள் அனைத்தும் முதல் மைதானத்தில் நடைபெற உள்ளன.