எல்லை மீறிய போட்டியாளர்கள் – ஏமாற்றம் அளித்த விஜய் சேதுபதி
இந்த சீசன் தொடங்கியதிலிருந்து கடந்த வாரம் வரை நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வுகள், இதற்கு முன்பு எந்த சீசனிலும் நடந்ததில்லை என்று சொல்லலாம். போட்டியாளர்கள் மாறி மாறி ஒருவர்மேல் ஒருவர் கடுமையான வார்த்தைகளால் தாக்கிய விதம் பார்ப்பவர்களைப் பாதிக்கும் அளவுக்கு இருந்தது. அதைவிட அதிர்ச்சியளித்தது, மூன்றாவது வார இறுதியில் விஜய் சேதுபதி அதைப் பொருட்படுத்தாமல், மேற்பரப்பாகவே கையாள்ந்தது தான்.
திவாகர் மற்றும் கானா வினோத் இடையிலான நகைச்சுவைத் தகராறுகள் ஆரம்பத்தில் இயல்பாக இருந்தன. ஆனால் அந்தச் சம்பவங்களை கடந்த வார இறுதியில் விஜய் சேதுபதி “வெளியில் உங்களுடைய நட்பு வைரலாகி வருகிறது” என்று குறிப்பிட்டபோது, அது போட்டியாளர்களிடையே புதிய பதட்டத்தை உருவாக்கியது. இதனால், வினோத்தின் திவாகரை நோக்கிய ஏசல்கள் ஓவராகி, ஒருகட்டத்தில் பார்வையாளர்களுக்கும் திவாகருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது.
அதை விட மோசமானது, திவாகரின் உருவத்தையும் நடையையும் கேலி செய்த சம்பவம். வினோத்துடன் கம்ருதீனும் சேர்ந்து “மரத்துக்கு சேலை கட்டுவது”, “பொம்பள பொறுக்கி” போன்ற அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்தியது பெரும் கண்டனத்தை கிளப்பியது. இதுவரை எந்த சீசனிலும் இத்தகைய மொழி கேட்கப்படவில்லை.
மற்றொரு பக்கம், ஜூஸ் கடை டாஸ்க்கின் போது திவாகரின் நெருங்கிய தோழியான பார்வதியும் உணவு தொடர்பாக அவரிடம் மோசமான முறையில் பேசினார். எப்போதும் அமைதியாக இருந்த திவாகரே இந்த முறை கட்டுப்பாட்டை இழந்தார்.
திவாகரும் இதில் குறைவில்லை. அவர் யாரிடமும் சண்டையிட்டாலும், “நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை”, “என்னுடைய பேக்கிரவுண்ட் தெரியுமா?” என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார். கம்ருதீனைப் பற்றியும் தனிப்பட்ட கருத்துகளை பகிர்ந்தது சர்ச்சையாக மாறியது. அதேபோல், கம்ருதீனும் துஷாரிடம் அதே வார்த்தையையே (“நீ ஒரு வாயில்லா பூச்சி”) பிரயோகித்தது, அதுவும் விஜய் சேதுபதி முன்னிலையில் நடந்தது.
இத்தனை அநாகரிக நிகழ்வுகள் நடந்த நிலையில், விஜய் சேதுபதி தனது வார இறுதி உரையாடலில் இதைப் பற்றி கடுமையாக எதுவும் சொல்லாமல் விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. முதல் வாரத்தில் ஆதிரை எழுந்து நிற்காததற்காக கண்டித்த விஜய் சேதுபதி, இந்த வாரம் போட்டியாளர்களின் அநாகரிக நடத்தை குறித்து கடுமையாக பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது.
முக்கியமாக “வளர்ப்பு” குறித்து பேசப்பட்ட வார்த்தைகள் குறித்து அவர் எதுவும் குறிப்பிடாதது கேள்விகளை எழுப்புகிறது. முந்தைய சீசனில் இதேபோன்ற கருத்துக்காக கமல் கடுமையாக கண்டித்ததை நினைவுபடுத்த வேண்டியது அவசியம்.
குடும்பத்துடன் நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என்று பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருப்பதை அவர் போட்டியாளர்களிடம் கூறியபோதும், அவர்களை எச்சரித்து அறிவுரை கூறியிருக்கலாம். ஆனால் அந்த எச்சரிக்கை இல்லாமை, இந்த வாரத்தின் மிகப்பெரிய குறையாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.