ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – எந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் தடுக்க முடியாது
அணுசக்தியால் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ (9எம்730 Burevestnik) என்ற புதிய ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையை வான் பாதுகாப்பு அமைப்புகள் அல்லது எதிரி நாடுகளின் பாதுகாப்பு ஏவுகணைகளால் நடுவானில் தடுத்து அழிப்பது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு ரஷ்யா இந்த அணுசக்தி ஏவுகணை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்னதாக, 2001 இல் அமெரிக்கா “சக்திவாய்ந்த ஏவுகணை தயாரிப்பு திட்டங்களில் ஈடுபட வேண்டாம்” என்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. அதன் பின்னர், நேட்டோ படைகள் மற்றும் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு திட்டங்கள் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டன. இதற்கான பதிலடியாக ரஷ்யா ‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ ஏவுகணையை உருவாக்கியதாக அதிபர் வ்லாதிமிர் புதின் தெரிவித்திருந்தார்.
இந்த ஏவுகணை மிக நீண்ட தூரம் வரை பறக்கக்கூடியது மட்டுமல்லாமல், அதன் பறக்கும் பாதையை முன்னரே கணிக்க முடியாது என்பதும் இதன் சிறப்பு.
சமீபத்தில், அக்டோபர் 21 ஆம் தேதி ரஷ்யா இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. சோதனைக்காக வானில் சுமார் 15 மணி நேரம் பறந்து, 14,000 கிலோமீட்டர் தூரம் சென்றதாக ரஷ்ய ராணுவத் தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, உக்ரைன் போரில் ஈடுபட்டிருக்கும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் அதிபர் புதின் கலந்துரையாடினார். போர்கால சீருடை அணிந்து பேசிய புதின்,
“இவ்வளவு சக்திவாய்ந்த ஏவுகணை உலகின் எந்த நாடிலும் இல்லை. இதுபோன்ற ஆயுதத்தை உருவாக்க முடியாது என்று நிபுணர்கள் கூறியிருந்தனர். ஆனால் இன்று, நமது விஞ்ஞானிகள் அதைக் கைகூறச் செய்துள்ளனர்,”
என்று பெருமிதத்துடன் கூறினார்.
உக்ரைன் போருக்கான அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ரஷ்யா இந்த அணுசக்தி ஏவுகணையை சோதனை செய்தது. இதன் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அதிபர் புதின் வலுவான எச்சரிக்கை விடுத்துள்ளார் என சர்வதேச வட்டாரங்கள் கூறுகின்றன.