மகளிர் உலகக் கோப்பையில் அதிர்ச்சி: இந்தியாவின் பிரதிகா ராவல் விலகல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடக்க வீராங்கனையான பிரதிகா ராவல், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
நவிமும்பையில் நடைபெற்ற இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது, 21-வது ஓவரில் பீல்டிங் செய்துகொண்டிருந்த பிரதிகா ராவலுக்கு முழங்காலும் கணுக்காலும் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மைதானத்திலிருந்து வெளியேறி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதன் பின் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், கடுமையான காயம் உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு மீதமுள்ள உலகக் கோப்பை ஆட்டங்களில் விளையாட முடியாது என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
25 வயதான பிரதிகா ராவல், நடப்பு உலகக் கோப்பை தொடரில் சிறந்த பேட்டிங் பார்மில் விளங்கியவர். இதுவரை 6 ஆட்டங்களில் 51.33 சராசரியுடன் 308 ரன்கள் குவித்துள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிராக அவர் அடித்த சதம் ரசிகர்களை கவர்ந்தது. மேலும், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் எட்டிய வேகமான வீராங்கனைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
வரும் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது. இந்நிலையில் பிரதிகா ராவலின் விலகல், அணிக்கு பெரும் சவாலாக உள்ளது.
ஏற்கனவே விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ், விரல் காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆடவில்லை. இப்போது பிரதிகா ராவலும் விலகியிருப்பதால், அணியின் அமைப்பில் மாற்றம் அவசியமாகியுள்ளது.
அவருக்குப் பதிலாக ஷபாலி வர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.