ஹங்கேரி எழுத்தாளர் லஸ்லோ கிராஸ்னாகோர்காய் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்
இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லஸ்லோ கிராஸ்னாகோர்காய்க்கு வழங்கப்படுவதாக நோபல் குழு அறிவித்துள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நான்காவது பிரிவாக இலக்கியத்திற்கான பரிசு அறிவிக்கப்பட்டது. உலக இலக்கியத்தில் தனித்துவமான பங்களிப்பு செய்ததற்காக கிராஸ்னாகோர்காய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1954 ஆம் ஆண்டு ஹங்கேரியில் பிறந்த லஸ்லோ கிராஸ்னாகோர்காய், 1985-ல் வெளியான தனது முதல் நாவல் ‘சாட்டன்டாங்கோ’ மூலம் இலக்கிய உலகில் கவனம் பெற்றார். பின்னர் எழுதிய ‘Spadework for a Palace: Entering the Madness of Others’ உள்ளிட்ட படைப்புகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நோபல் குழு வெளியிட்ட அறிக்கையில், “கிராஸ்னாகோர்காய் தனது படைப்புகள் மூலம் கலையின் ஆழ்ந்த சக்தியையும் மனித மனத்தின் சிக்கல்களையும் வெளிப்படுத்தியுள்ளார். தீவிரவாதம் மற்றும் அழிவு சூழலில் மனிதநேயம் நிலைத்திருக்கக் காரணமான கலைமையின் வலிமையை அவரது எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.
மத்திய ஐரோப்பிய இலக்கியத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து வந்த மிகச்சிறந்த இதிகாச எழுத்தாளர்களில் ஒருவராக லஸ்லோ கிராஸ்னாகோர்காய் கருதப்படுகிறார். இவ்வாண்டு நோபல் பரிசு பெற்றதன் மூலம் அவர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே, டோனி மோரிசன் போன்ற புகழ்பெற்ற இலக்கிய மாமனிதர்களின் வரிசையில் இணைந்துள்ளார்.