“நடிகர்கள் பின்னால் ஓடி வாழ்க்கையை வீணாக்காதீர்கள்” – இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான அறிவுரை!
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இளைஞர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. “நடிகர்கள் பின்னால் சென்று, முண்டியடித்துக் கொண்டு கீழே விழுந்து காயம் அடைந்தால் அது உங்களுக்குத்தான் ஆபத்து; உங்கள் குடும்பத்திற்குத்தான் கஷ்டம்” என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள் தங்களது உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும் என்றும், படிக்க வேண்டிய வயதில் படிப்பில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்களைச் சீரழிக்கும் மதுப்பழக்கம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு ஒருபோதும் அடிமையாகிவிடக் கூடாது என எச்சரித்த ரஜினி, அத்தகைய பழக்கங்களால் ஒட்டுமொத்த வாழ்க்கையே கெட்டுப் போய்விடும் என்றும் கவலை தெரிவித்தார். சூப்பர் ஸ்டாரின் இந்த எதார்த்தமான அறிவுரை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு இளைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





