மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ‘சிறப்பு தீவிர திருத்தப் பணி’ (SIR) காரணமாக, அம்மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 90.83 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே நீக்கப்பட்ட 63 லட்சம் பெயர்களுடன், தற்போது நீதித்துறை ஆய்வுக்குப் பிறகு தகுதியற்றதாகக் கருதப்பட்ட மேலும் 27 லட்சம் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மேற்கு வங்கத்தின் ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 12 சதவீதம் வரை குறைந்துள்ளது. தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே முடக்கப்பட்டுவிட்டது. எனவே, இனி புதிய பெயர்கள் சேர்க்கப்படாது என்றும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான இறுதிப் பட்டியல் நாளை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.





