தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி – முழு விவரம்
இந்தியா முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று (அக்.28) முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தெனிந்திய மாநிலங்களும் அடங்கும்.
டெல்லியில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்ததாவது:
“1951 முதல் 2004 வரை, நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மொத்தம் 8 முறை நடத்தப்பட்டது. கடைசியாக 2002–04 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகள் கழித்து, பிஹாரில் கடந்த மாதம் நடைபெற்ற தீவிர திருத்தப் பணி வெற்றிகரமாக முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது 12 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இதே பணி தொடங்கப்படுகிறது,” என அவர் கூறினார்.
🔹 எந்த மாநிலங்கள்?
இந்தப் பணிகள் நடைபெற உள்ள பகுதிகள்:
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அந்தமான்–நிகோபர், லட்சத்தீவு, சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம்.
🔹 வாக்காளர் எண்ணிக்கை:
- தமிழகம் – 6.41 கோடி வாக்காளர்கள், 68,467 வாக்குச்சாவடிகள்
- புதுச்சேரி – 10.21 லட்சம் வாக்காளர்கள், 962 வாக்குச்சாவடிகள்
- மொத்தம் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் – 51 கோடி வாக்காளர்கள்
🔹 திருத்தப் பணி நடைமுறை:
- அக்டோபர் 27 நள்ளிரவுடன் வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டு, இன்று (அக்.28) முதல் திருத்தப் பணிகள் தொடங்குகின்றன.
- அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய படிவங்கள் வழங்கப்படும்.
- 18 வயதுக்கு மேற்பட்டோர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்படுவர்.
- இறந்தவர்கள், வெளிநாட்டினர், இடம்பெயர்ந்தோர், ஒரே நபரின் பெயர் பல இடங்களில் இருப்பது போன்றவை நீக்கப்படும்.
- ஆதார் அட்டை அடையாள ஆவணமாக மட்டும் பயன்படுத்தப்படும்; குடியுரிமை அல்லது பிறந்த தேதிக்கான சான்றாக ஏற்கப்படாது.
🔹 பிஎல்ஓவின் பணி:
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு பிஎல்ஓ (Booth Level Officer) நியமிக்கப்படுவார்.
அவர் வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி, விவரங்களை சேகரிப்பார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று முறை வருகை தருவார்.
மேலும், ஆன்லைன் வழியிலும் வாக்காளர் விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.
🔹 விதிவிலக்குகள்:
அசாமில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் அங்குள்ள மக்களின் குடியுரிமை ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டிருப்பதால், அந்த மாநிலத்தில் இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படமாட்டாது.