“இந்தியா மீது கை வைத்தால் பாகிஸ்தான் சிதறிவிடும்” – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி எச்சரிக்கை!
இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாகச் சிதறும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். முன்னதாக, “இந்தியா தாக்குதல் நடத்தினால் நாங்கள் கொல்கத்தா வரை சென்று பதில் தாக்குதல் நடத்துவோம்” என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் இத்தகையப் பேச்சுகள் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் பேசிய அவர், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசுவதை பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். குறிப்பாக, மேற்கு வங்கத்தின் மீது கை வைக்க முயன்றால், அதன் விளைவாகப் பாகிஸ்தான் எத்தனை துண்டுகளாகச் சிதறும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு எல்லையில் நிலவும் அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





