ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்ட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் – அணித்தேர்வில் குழப்பம் ஆஸ்திரேலியாவில்!
வரவிருக்கும் ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டிக்காக ஆஸ்திரேலிய அணியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேப்டன் பாட் கமின்ஸ் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகியதால், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்ட், பாட் கமின்ஸ் இரண்டாவது டெஸ்ட்டிலும் ஆடுவது உறுதியாக கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால், அணித்தேர்வில் குழப்பம் அதிகரித்துள்ளது.
பாட் கமின்ஸ், அணியுடன் பெர்த் சென்றிருப்பதுடன், வலைப்பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளார். எனினும், வலையில் பயிற்சி செய்யும் அளவுக்கு உடல் நலம் இருந்தும், ஏன் முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை என்ற கேள்வி ஆஸ்திரேலிய ஊடகங்களில் எழுந்துள்ளது.
ஆல்ரவுண்டர் தேர்வில் குழப்பம்
ஆல்ரவுண்டர்கள் பியூ வெப்ஸ்டர் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் உடல் நிலையை இந்த வார ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமரூன் கிரீன் பந்துவீச்சில் திரும்பியிருந்தாலும், உள்நாட்டு போட்டியில் விளையாடிய பின் தான் அவரது தேர்வு உறுதி செய்யப்படும்.
மிட்செல் மார்ஷ் கடந்த டெஸ்ட் தொடரில் பியூ வெப்ஸ்டரிடம் தனது இடத்தை இழந்திருந்தாலும், இம்முறை ஆஷஸ் தொடருக்கு அவரை மீண்டும் அணியில் சேர்க்க வாய்ப்பு இருப்பதாக மெக்டோனால்ட் குறிப்பிட்டுள்ளார். மார்ஷ், நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் மூன்று ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளில் தனது திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது.
ஓப்பனிங் ஜோடியில் சிக்கல்
உஸ்மான் கவாஜாவுடன் ஓப்பனராக விளையாடப் போவது யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதையும் ஷெஃபீல்ட் ஷீல்ட் ஆட்டங்களை வைத்தே தீர்மானிக்கப்படும் என்று மெக்டோனால்ட் தெரிவித்துள்ளார். மார்னஸ் லபுஷேன் சமீபத்திய ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியதால், அவர் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாம் கோன்ஸ்டாஸ் மற்றும் ஜாக் வெதரால்ட் ஆகியோரும் பரிசீலனையில் உள்ளனர்.
பந்துவீச்சு பிரிவில் மாற்றங்கள்
பாட் கமின்ஸுக்கு பதிலாக பூர்வக்குடி வீரர் ஸ்காட் போலண்ட் முதல் டெஸ்டில் ஆடுவது உறுதியாகியுள்ளது. அதேசமயம், மைக்கேல் நீசர் மற்றும் பார்ட்லெட் ஆகியோரும் பந்துவீச்சு அணியில் சேர வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இத்துடன், ஜாஷ் ஹாசில்வுட் அடிக்கடி காயம் காரணமாக முழு தொடர்களை நிறைவு செய்ய முடியாத வீரர் என்பதும் கவலைக்குரியது. பார்டர்–கவாஸ்கர் டிராபியிலும் இதே பிரச்சனை ஏற்பட்டது.
இதனால், பாட் கமின்ஸ் மற்றும் ஹாசில்வுட் ஆகியோரின் காயங்கள் ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் தலைவலி அளித்து வருகின்றன. இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா, சக்திவாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது சவாலாக மாறியுள்ளது.