திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், (அக்டோபர் 27) மாலை கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ என முழங்கிய நிலையில் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாக விளங்கும் திருச்செந்தூரில், கந்தசஷ்டி விழா அக்டோபர் 22 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஆறாம் திருநாளான இன்று, சூரசம்ஹாரம் நடைபெற்று, பக்தர்கள் பெருவெள்ளம் கோயிலும் கடற்கரையும் நிரப்பியது.
காலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளியதும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், காலை 9 மணிக்கு பூர்ணாஹுதி, அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் சுவாமி தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு, சண்முக விலாசம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபம் வழியாக எழுந்தருளினார். அங்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் போர்க் கோலத்தில் கடற்கரைக்கு எழுந்தருளினார். அதே நேரத்தில், சிவன் கோயிலில் இருந்து சூரபத்மனும் தனது பரிவாரங்களுடன் கடற்கரைக்கு வந்தார்.
பின்னர், மாலை 4.56 மணிக்கு கஜ முகத்துடன் வந்த சூரனை ஜெயந்திநாதர் வேலால் வதம் செய்தார்.
5.16 மணிக்கு சிங்க முகத்துடன் வந்த சூரன் வதம் செய்யப்பட்டார்;
5.32 மணிக்கு, சுயரூபத்தில் வந்த சூரபத்மனும் வதம் செய்யப்பட்டார். அதன் பிறகு, சேவலாக உருமாறிய சூரனை சுவாமி ஆட்கொண்டார்.
அந்த நேரத்தில், கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” என முழங்க, சுவாமி தரிசனம் செய்து ஆனந்தமடைந்தனர். பின்னர் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர்.
பின்னர், சந்தோஷ மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின் பூஞ்சப்பரத்தில் கிரிபிரகாரம் உலா வந்த சுவாமி கோயிலில் பிரவேசித்தார். இரவு 108 மகாதேவர் சன்னதி முன் சாயா அபிஷேகமும், சஷ்டி பூஜை தகடு கட்டும் நிகழ்வும் நடைபெற்றன.
இவ்விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, எம்எல்ஏ கடம்பூர் ராஜு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், செந்தில்குமார், புகழேந்தி, அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இணை ஆணையர் க. ராமு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பணிக்காக ஏடிஜிபி (சைபர் கிரைம்) சந்தீப் மிட்டல், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சிங்கா, திருநெல்வேலி சரக டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி, தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் 4,300 போலீஸார் பணியாற்றினர்.