அதிகரிக்கும் வரவேற்பு – மாரி செல்வராஜின் ‘பைசன்’ ரூ.55 கோடி வசூல்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பைசன் காளமாடன்’ திரைப்படம், ரசிகர்களிடையே தொடர்ந்து அதிகரிக்கும் வரவேற்பினால், இதுவரை ரூ.55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவ் விக்ரம், பசுபதி, ராஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கிய இப்படம், சில நாட்களில் வாய்மொழி பாராட்டுகளின் மூலம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் வாரத்தில், புக்மைஷோ (BookMyShow) தளத்தில் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ திரைப்படம் அதிக டிக்கெட் விற்பனை பெற்றிருந்தாலும், கடந்த சில நாட்களாக ‘பைசன்’ படத்தின் டிக்கெட் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பத்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் ஃபைவ் ஸ்டார் நிறுவனத்துடன், பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.