மெட்டா சூப்பர் இன்டலிஜென்ஸ் திட்டத்துக்கு தலைமை தாங்கும் அலெக்ஸாண்டர் வாங்கின் பின்னணி
மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பிரிவின் தலைமை அதிகாரியாக திறமையுடன் விளங்கும் அலெக்ஸாண்டர் வாங்-ஐ நியமித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு, வயது 19 ஆக இருக்கும்போது, வாங் தனது நண்பர் லூசி குவாவுடன் இணைந்து ஸ்கேல் ஏஐ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினார். தங்கள் கனவை நனவாக்க கடின உழைப்பின் மூலம், குறுகிய காலத்திலேயே அந்த நிறுவனம் தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்தது.
அலெக்ஸாண்டர் வாங்-இன் திறமையையும் புதுமை நோக்கையும் கண்டு வியந்த மெட்டா நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், அவரை நிறுவனத்தின் மொத்த ஏஐ நடவடிக்கைகளுக்கும் தலைவராக நியமித்தார். மேலும், வாங் தொடங்கிய ஸ்கேல் ஏஐ நிறுவனத்தில் 14.3 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.24 லட்சம் கோடி) முதலீடு செய்தார்.
தற்போது வாங், மெட்டாவின் நிபுணர்கள் அடங்கிய குழுவை வழிநடத்தி வருகிறார். மேலும், மெட்டா சூப்பர் இன்டலிஜென்ஸ் லேப்ஸ் என்ற அமைப்பின் கீழ் செயல்படும் அனைத்து ஏஐ மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளும் அவரின் மேற்பார்வையில் இயங்குகின்றன.
பதவி ஏற்ற சில நாட்களிலேயே, வாங் மெட்டா ஏஐ குழுவை நான்கு தனித்தனி பிரிவுகளாக பிரித்து மறுசீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளார்.
1997-ஆம் ஆண்டு பிறந்த அலெக்ஸாண்டர் வாங், சீன வம்சாவளியைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநர் தம்பதிகளின் மகன் ஆவார். அவர் எம்.ஐ.டி.யில் (MIT) படித்தபோது படிப்பை பாதியில் கைவிட்டு ஸ்கேல் ஏஐயை தொடங்கினார். 20 வயதிலேயே பில்லியனராக மாறிய வாங், ஓபன் ஏஐ தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் மற்றும் சிலிக்கான் வேலியின் முக்கிய நபர்கள், அமெரிக்க அரசியல்வாதிகள் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளார்.
மெட்டா ஏஐ பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு வெளியிட்ட அறிக்கையில், நிறுவனத்தின் நீண்டகால நோக்கை அடைய கூர்மையான கவனம் தேவை என வாங் வலியுறுத்தியுள்ளார்.