தெருநாய்கள் வழக்கில் தமிழகம் உட்பட மாநில தலைமைச் செயலர்கள் நவம்பர் 3ல் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் தெருநாய்கள் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வரும் வழக்கில், தமிழகம் உட்பட பல மாநில தலைமைச் செயலர்கள் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் சிறுவர்கள் மீது தெருநாய்கள் தாக்குதல் நடத்தி, ரேபிஸ் தொற்று பரவிய சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதை அடுத்து, நாடு முழுவதும் தெருநாய்கள் பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றம் suo motu (தாமாகவே) வழக்கெடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், தங்களது பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்த எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், காலக்கெடு முடிந்தபின்னரும், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி மாநகராட்சி தவிர மற்ற மாநிலங்கள் பதில்மனு தாக்கல் செய்யவில்லை.
இதனை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, “இந்த வழக்கு நடப்பது மாநில தலைமைச் செயலர்களுக்குத் தெரியாதா? நாளிதழ்களையும், சமூக வலைதளங்களையும் பார்ப்பதில்லை?” என்று கடுமையாகக் கேள்வி எழுப்பியது.
மேலும், “தெருநாய்களின் தாக்குதலால் சிறுவர், சிறுமியர் பாதிக்கப்படுவது நாட்டின் மதிப்பைக் குறைக்கிறது; பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை மிகுந்த சோகமானது” என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, பதில்மனு தாக்கல் செய்ய தவறிய தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், வரும் நவம்பர் 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம், இந்த வழக்கு உச்சநீதிமன்ற கலையரங்கில் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.