அசைவ உணவு வழங்கியதில் ஏற்பட்ட உயிரிழப்பு – கத்தார் ஏர்வேஸ் மீது மகன் நஷ்டஈடு வழக்கு
லாஸ் ஏஞ்சல்ஸ் – கொழும்பு பயணத்தின் போது தவறுதலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால் தந்தை உயிரிழந்ததாகக் கூறி, மகன் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிராக நஷ்டஈடு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி, கத்தார் ஏர்வேஸ் விமானம் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது. அந்தப் பயணத்தில் 85 வயதான அசோகா ஜெயவீரா என்றவர் பயணித்தார்.
அவர் தெற்கு கலிபோர்னியாவில் இதயவியல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
டிக்கெட் முன்பதிவின் போது, அசோகா ஜெயவீரா சைவ உணவு (Vegetarian Meal) வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் பயணத்தின் போது, சைவ உணவு இல்லையெனவும், அசைவ உணவே வழங்க முடியும் எனவும் விமான பணிப்பெண்கள் கூறியதாக தகவல்.
இதனால் வேறு வழியின்றி அசோகா அந்த உணவை உண்டதாகவும், அதன் பின்னர் உடனே மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விமான பணியாளர்கள் உடனடியாக முதலுதவி செய்தபோதும், அவர் அங்கேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, அசோகா ஜெயவீராவின் மகன் சூர்யா ஜெயவீரா, கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு எதிராக 1,28,821 அமெரிக்க டாலர் (சுமார் ₹1.07 கோடி) இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.