நீடிக்கும் அரசு முடக்கம்: 4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம்!
அமெரிக்க அரசு முடக்கம் மூன்றாவது வாரத்தையும் கடந்து நீடிக்கின்ற நிலையில், இது தொடர்ந்தால் குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கக் குடும்பங்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. அரசு வழங்கும் ‘ஃபுட் ஸ்டாம்ப்ஸ்’ (Supplemental Nutrition Assistance Program – SNAP) எனப்படும் உணவு உதவித் திட்டம் நிதி தட்டுப்பாட்டால் நவம்பரில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால், அந்தத் திட்டத்தை சார்ந்து வாழும் சுமார் 4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடியில் சிக்கக்கூடும் என்று எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த ஆபத்தைக் கவனிக்காமல், அரசு இதற்கான பொறுப்பை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியிடம் தள்ளியுள்ளது. வேளாண் துறை செயலர் ப்ரூக் ரோலின்ஸ் சமூக வலைத்தளத்தில், “ஜனநாயகக் கட்சி வெளிநாட்டவர்களுக்கு நன்மை செய்யும் மருத்துவத் திட்டத்திற்காக, அமெரிக்கர்களுக்கான உணவு பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது — இது வெட்கக்கேடு” என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க நிதியாண்டு ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 30-ல் முடிந்து, புதிய நிதியாண்டு அக்டோபர் 1-ல் தொடங்கும். அரசு செயல்பட தேவையான நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குறைந்தது 60% உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அது நடைபெறாததால், அரசு முடக்கம் ஏற்பட்டது. இதற்கு, “அஃபோர்டபிள் கேர்” அல்லது “ஒபாமா கேர்” எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு குடியரசுக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததே முக்கிய காரணம்.
ஃபுட் ஸ்டாம்ப்ஸ் திட்டம் என்றால் என்ன?
இந்தத் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வாங்குவதற்கான அட்டை வழங்குகிறது.
ஒரு தனிநபர் மாதம் 190 டாலர், ஒரு குடும்பம் 356 டாலர் மதிப்பிலான உணவுப் பொருட்களை வாங்கலாம்.
இதன் மூலம் காய்கறிகள், பழங்கள், இறைச்சி, பால், ரொட்டி போன்ற உணவுப் பொருட்கள் வாங்கலாம். ஆனால் மதுபானம் போன்ற பொருட்கள் வாங்க அனுமதி இல்லை.
அரசு முடக்கம் காரணமாக புள்ளிவிவரத் துறை பணிகளும் நின்றுள்ளதால், நிதி நிலை பற்றிய சரியான தகவல்கள் இல்லை. இருப்பினும், சமூக வலைதளங்களில் நவம்பர் 1 முதல் SNAP திட்டம் செயலிழக்கும் என்ற செய்திகள் பரவி வருகின்றன. இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குளிர்காலம் தொடங்கி, தேங்க்ஸ் கிவிங் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளும் நெருங்கி வரும் சூழலில், இந்த திட்டம் நிறுத்தப்பட்டால் மக்கள் பெரும் பிரச்சினையில் சிக்கக்கூடும். இதை உறுதிப்படுத்தும் வகையில், வேளாண் துறை மாகாண அதிகாரிகளுக்கு, “திட்ட நிதி இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது” என அறிவித்துள்ளது.
ட்ரம்ப் செய்யக்கூடியது என்ன?
அரசு முடக்கம் நீடித்தாலும், அவசர நிதி வழியாக ட்ரம்ப் ஃபுட் ஸ்டாம்ப்ஸ் திட்டத்துக்கு தற்காலிக நிதி விடுவிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அது முழு மாதத்துக்கு போதாது. சிலர் இதை முழுமையாக நிறுத்தாமல், கிடைக்கும் நிதியைக் கொண்டு இடைக்காலமாக நடத்தலாம் என்றும் கூறுகின்றனர்.
இதே நேரத்தில், அரசு மகளிர், குழந்தைகள் மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான WIC திட்டத்துக்கு நிதி தயாராக உள்ளது என தெரிவித்துள்ளது. எனினும், பல மாநில அதிகாரிகள், “ஷட்டவுன் தொடர்ந்தால் நவம்பர் முதல் SNAP உதவிகள் நிறுத்தப்படலாம்” என்று எச்சரிக்கின்றனர்.
கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் கூறுகையில், “உணவு வங்கிகள் செயல்பட 80 மில்லியன் டாலர் விடுவிக்கிறோம்” என்றார்.
விஸ்கான்சின் ஆளுநர் கூறியதாவது: “வெற்று வயிறுகளும் காலியான பானைகளும் வாஷிங்டனின் தவறின் விளைவு.”
அரசு முடக்கம் காரணமாக மாநில உணவு வங்கிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் தடைபட்டுள்ளன. எனவே, குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் இடையேயான அரசியல் மோதல் முடிவுக்கு வந்து, அரசு இயல்பு நிலைக்குத் திரும்பினால் மட்டுமே இந்த நெருக்கடி தீரும்.