ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த மாதம் 16-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய இந்த ஆண்டுக்கான திருவிழாவில், நாள்தோறும் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் ஒரு பகுதியாக, பண்ணாரி அம்மன் சப்பரம் பவானிசாகர், சத்தியமங்கலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டு பக்தர்களுக்குக் காட்சியளித்தது. கிராமத்து ஊர்வலங்கள் முடிந்து அம்மனை மீண்டும் கோயிலுக்கு அழைத்து வரும் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து “அம்மா… தாயே… பண்ணாரியம்மா…” எனப் பக்தி முழக்கமிட்டபடி தீமிதித்துத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பண்ணாரி அம்மன் கோயில் வளாகமே பக்தர்களின் வருகையால் ஆன்மீகக் கடலாகக் காட்சியளித்தது.






