காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி பிரம்மோற்சவம்: வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா!
ஆன்மிக நகரான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயிலில், பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த உற்சவத்தில், நாள்தோறும் சுவாமியும் அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகின்றனர்.
விழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக, ஏகாம்பரநாதர் சுவாமியும் ஏலவார்குழலி அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியே மங்களகரமான வெள்ளி குதிரை வாகனங்களில் எழுந்தருளினர். மேளதாளங்கள் முழங்க நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்த சுவாமியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று பக்திப் பெருக்குடன் தரிசனம் செய்தனர். இந்த பிரம்மோற்சவ விழாவால் காஞ்சிபுரம் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.








