பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்
கேரள மாநிலத்தின் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார். பாலக்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவருக்குப் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்; மேடையில் செண்டை மேளம் வாசித்து உற்சாகமடைந்த பிரதமர், கேரளாவில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசி வருவதாகக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து திருச்சூரில் நடைபெற்ற பிரம்மாண்ட சாலைப் பேரணியில் (Road Show), மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபியுடன் திறந்தவெளி வாகனத்தில் சென்ற பிரதமர் மோடிக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பிரதமரின் இந்தப் பயணம் கேரள அரசியலில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.







