“இந்தியாவுடனான உறவை சரிசெய்ய வேண்டும்” – அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 21 எம்.பிக்கள் கடிதம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்திருப்பது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையால் இந்தியா–அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகி வரும் நிலையில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் 21 பேர், அதிபர் ட்ரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தேபோரா ராஸ் மற்றும் ரோ கண்ணா தலைமையில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அமெரிக்காவின் நெருக்கமான கூட்டாளி. செமிகண்டக்டர், சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை நம்பி இயங்குகின்றன.
சீனாவின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்த இந்தியாவின் நட்பு அவசியம். ஆனால் கூடுதல் வரி விதிப்பால் இந்தியா சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருங்கும் அபாயம் உருவாகியுள்ளது. இது அமெரிக்காவின் நலனுக்கு பாதிப்பாகும்.”
அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு விதித்துள்ள கூடுதல் வரியை வாபஸ் பெறவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கவும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.