பிரான்சில் யுபிஐ அறிமுகத்துக்குப் பிறகு இந்திய சுற்றுலா பயணிகள் 40% அதிகரிப்பு
இந்தியாவின் யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) முறையை பிரான்சில் அறிமுகப்படுத்தியதையடுத்து, அங்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக பிரெஞ்சு பின்டெக் நிறுவனம் லைரா நெட்வொர்க் தலைவர் கிரிஸ்டோஃப் மரியட் தெரிவித்துள்ளார்.
குளோபல் பின்டெக் மாநாட்டில் பேசிய அவர் கூறியதாவது:
“ஒரு வருடத்திற்கு முன்பு, இந்தியாவின் யுபிஐ வசதியை பிரான்சின் பிரபலமான ஐஃபல் கோபுரத்தில் அறிமுகப்படுத்தினோம். சில வாரங்களுக்கு முன் அந்தக் கோபுரத்தின் பொது மேலாளருடன் பேசியபோது, இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை 40% வரை உயர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார். இது எங்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இந்திய சுற்றுலாப் பயணிகள் வெளிநாட்டில் பயணம் செய்யும்போது, யுபிஐ போன்ற பழக்கமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டண முறைகள் கிடைப்பதால் மிகவும் வசதியாக உணர்கிறார்கள். விரைவில் பிரான்சின் பைசெஸ்டர் வில்லேஜ் ஷாப்பிங் மையத்திலும் யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்படும்,” என்றார்.