உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் – கவாய் பரிந்துரை
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்த் நியமிக்கப்படுவதற்காக, தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.
தலைமை நீதிபதியை நியமிக்கும் நடைமுறையின்படி, மத்திய சட்ட அமைச்சகம் முதலில் தற்போதைய தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி, அவருக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டிய நபரை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறது. இதற்கமைய, கவாய் தனது பின்தொடர்வராக மூத்த நீதிபதி சூர்ய காந்தை பரிந்துரைத்துள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நவம்பர் 24, 2025 அன்று ஓய்வு பெற உள்ளதால், அதே நாளில் சூர்ய காந்த் இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
சூர்ய காந்தின் வாழ்க்கைச் சுருக்கம்
சூர்ய காந்த், 1962 பிப்ரவரி 10 அன்று ஹரியானா மாநிலத்தின் ஹிசார் நகரில் பிறந்தவர். அங்கு பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை முடித்த பிறகு, ரோத்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார் (1984).
அதனைத் தொடர்ந்து, 1985ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப்–ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். அரசியலமைப்பு, சேவை மற்றும் சிவில் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற அவர், பல கல்வி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வாரியங்களில் முக்கிய சட்ட ஆலோசகராக இருந்துள்ளார்.
2000 ஜூலை 7ஆம் தேதி ஹரியானாவின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்ட அவர், 2001இல் மூத்த வழக்கறிஞர் பட்டம் பெற்றார். பின்னர், 2004 ஜனவரி 9ஆம் தேதி பஞ்சாப்–ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்.
அதன்பின், 2018ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2019 மே 24 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார். அவர் 2027 பிப்ரவரி 9 அன்று ஓய்வு பெறுவார்.