பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது
பிலிப்பைன்ஸ் தெற்கில் உள்ள மின்தனோவோ பகுதியில் இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பலாவ் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிலநடுக்கம் கடலடியில் சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால் கடலோரப் பகுதிகளில் அலைகள் உருவாகும் அபாயம் இருந்தது. இதனால் அங்குள்ள மக்களுக்கு உடனடியாக உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு பிலிப்பைன்ஸ் நிலநடுக்க ஆய்வு மையம் (Phivolcs) அறிவுறுத்தியது.
ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC), “இனி பெரிய அளவில் சுனாமி அபாயம் இல்லை” என்று அறிவித்து அனைத்து எச்சரிக்கைகளையும் ரத்து செய்தது.
இதற்கிடையில், சில கடலோரங்களில் சிறிய அலைகள் மட்டுமே பதிவாகியுள்ளன. குறிப்பாக இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் அலைகள் அதிகபட்சமாக 17 செ.மீ உயரத்தை எட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், சிறிய அளவிலான கடல் அலை மாற்றங்கள் தொடரக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.