காதலின் சிகரம்: நோய்வாய்ப்பட்ட மனைவிக்காக 105 நாட்கள் தினசரி 12 மணிநேரம் பயணித்த சீன முதியவர்!
பெய்ஜிங்:
சீனாவில் நோய்வாய்ப்பட்ட தனது மனைவியைக் காண்பதற்காக 82 வயது முதியவர் ஒருவர், கடந்த 105 நாட்களாகத் தினமும் 12 மணிநேரம் பயணம் செய்த நெகிழ்ச்சிகரமான சம்பவம் உலகெங்கும் உள்ள மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. சீனாவின் ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயதான விவசாயி சென் அசோங், தனது வாழ்நாள் துணையின் மீதான மாறாத அன்பை இச்செயலின் மூலம் நிரூபித்துள்ளார்.
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு நிங்போ நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியைப் பார்ப்பதற்காக, சென் அசோங் தினமும் அதிகாலை 4:30 மணிக்கே எழுந்து உணவுகளைத் தயாரிப்பார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் காலை 10:30 முதல் 11:00 மணி வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. அந்த அரை மணி நேரத்திற்காக, அவர் பேருந்து மற்றும் ரயில் எனத் தொடர்ந்து 6 மணிநேரம் பயணம் செய்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளார். மீண்டும் வீடு திரும்புவதற்கு 6 மணிநேரம் என, ஒரு நாளைக்கு மொத்தம் 12 மணிநேரத்தை அவர் பயணத்திலேயே செலவிட்டுள்ளார்.
இப்படியாகத் தொடர்ந்து 105 நாட்கள் தளர்வில்லாமல் பயணம் செய்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி அந்த உருக்கமான தருணம் நிகழ்ந்தது. வழக்கம்போல மனைவியைப் பார்த்துவிட்டு அவர் வீடு திரும்பத் தயாரானபோது, அவரது மனைவியின் இதயத் துடிப்பு நின்றது. உடனடியாக ஓடிச் சென்று தனது மனைவியின் கைகளைப் பற்றிக்கொண்ட சென் அசோங், “இந்தப் பிறவியில் நமக்கான பந்தம் முடிந்துவிட்டது” என்று கண்ணீர் மல்கக் கூறி விடைபெற்றார். முதியவரின் இந்த அசாத்திய அன்பைக் கண்ட இணையவாசிகள், அவரை “உலகின் மிகச்சிறந்த கணவர்” எனச் சமூக வலைதளங்களில் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.









