எல் கிளாசிகோவில் பார்சிலோனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரியல் மாட்ரிட்: எம்பாப்பே, பெல்லிங்கம் மிளிர்ந்தனர்
நடப்பு லா லிகா சீசனின் முதல் “எல் கிளாசிகோ” மோதலில், பார்சிலோனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. அணிக்காக ஜூட் பெல்லிங்கம் வெற்றி கோலைப் பதிவு செய்து அசத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் கடும் போட்டியிட்டன. கடந்த சீசனில் நான்கு முறை மோதிய இரு அணிகளிலும் பார்சிலோனாவே வென்றிருந்தது. இதனால், இந்த முறை யார் வெல்வார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்தது.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்காக முதல் கோலை அடித்தார். 38வது நிமிடத்தில் பார்சிலோனாவின் ஃபெர்மின் லோபஸ் சமன்கோல் அடித்தார். எனினும், 43வது நிமிடத்தில் பெல்லிங்கம் பதிவு செய்த கோல் ரியல் மாட்ரிட் அணிக்கு வெற்றியை உறுதி செய்தது.
இரண்டாம் பாதியில் பார்சிலோனா பல முயற்சிகள் செய்தும் கோல் அடிக்க முடியவில்லை. மேலும், பெட்ரி இரண்டு மஞ்சள் கார்டுகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.
இந்த வெற்றியுடன் ரியல் மாட்ரிட் அணி சீசனில் 10 ஆட்டங்களில் 9 வெற்றி பெற்று, 27 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஆட்டத்தின் போது பார்சிலோனாவின் இளம் நட்சத்திரம் லாமின் யாமல் மற்றும் ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியர் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.