சிரஞ்சீவியுடன் இணையும் கார்த்தி?
சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் தமிழ் நடிகர் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
‘டாக்கு மஹாராஜ்’ படத்திற்குப் பிறகு, சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தை இயக்க பாபி (Bobby) ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கே.வி.என் நிறுவனமே தயாரிக்க உள்ளது. சிரஞ்சீவி மற்றும் பாபி இணைந்து பணியாற்றிய ‘வால்டர் வீரய்யா’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிரஞ்சீவி நடிக்கும் அனில் ரவிப்புடி இயக்கும் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கவுள்ள புதிய படத்திற்கான தேதிகளை ஒதுக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில், சிரஞ்சீவியுடன் முக்கிய வேடத்தில் நடிக்க கார்த்தியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தெலுங்கு ஊடகங்கள் கூறுவதன்படி, கார்த்தி கதை கேட்டுவிட்டு அதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக ‘ஹிட் 3’ படத்தில் நானியுடன் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்த கார்த்தி, இப்போது சிரஞ்சீவி படத்தில் முக்கிய வேடம் பெறுவது பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக கே.வி.என் நிறுவனம் கார்த்திக்கு மிகுந்த தொகையை சம்பளமாக வழங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சிரஞ்சீவி–கார்த்தி கூட்டணி உறுதியானால், படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பெரும் வணிக வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.