லெபனானில் காஸ்மியா பாலம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: போக்குவரத்து துண்டிப்பால் உணவு, மருந்து விநியோகம் பாதிக்கும் அபாயம்!
பெய்ரூட்:
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தெற்கு லெபனானில் உள்ள முக்கியப் பாலமான காஸ்மியா பாலம் மீது இஸ்ரேல் விமானப்படை இன்று அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான நேரடி மற்றும் மறைமுகப் போர் 24-வது நாளை எட்டியுள்ளது. ஈரான் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தெற்கு லெபனானில் லித்தானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த காஸ்மியா பாலம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசித் தகர்த்துள்ளன.
இந்தத் தாக்குதலின் மூலம், ஹிஸ்புல்லா அமைப்பினர் தெற்கு லெபனான் பகுதிக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் கருதப்படுகிறது. இருப்பினும், இந்தப் பாலம் தகர்க்கப்பட்டதால் தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.










