ரஞ்சி கோப்பை கிரிக்கெட் – தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டைச் சதம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நாகாலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் லீக் ஆட்டத்தில், தமிழக அணி வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் (Double Century) பதிவு செய்தார்.
‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழகமும் நாகாலாந்தும் மோதிய இந்த ஆட்டம், நாகாலாந்தின் திமாப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் துடுப்பெடுத்த தமிழ்நாடு, முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 399 ரன்கள் எடுத்திருந்தது. விமல் குமார் 189 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடினார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தை பிரதோஷ் ரஞ்சன் பால் (156) மற்றும் ஆந்த்ரே சித்தார்த் (30) தொடங்கினர். சித்தார்த் 65 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுபுறம், தன்னம்பிக்கையுடன் விளையாடிய பிரதோஷ் ரஞ்சன் பால், 314 பந்துகளில் 201 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இரட்டைச் சதம் பதிவு செய்தார்.
அவருடன் இந்திரஜித் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 115 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 512 ரன்கள் எடுத்த நிலையில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
பின்னர் துடுப்பெடுத்த நாகாலாந்து அணி, இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. டெகா நிஷ்சல் 80 ரன்களும், யுகந்தர் சிங் 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
தமிழகத்தின் குர்ஜப்நீத் சிங், 12 ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைப் பெற்றார். 362 ரன்கள் பின்தங்கிய நிலையில், நாகாலாந்து அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்கிறது.