திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் படையெடுப்பு: சனிப்பெயர்ச்சிக்கு பின் 3-வது சனிக்கிழமை சிறப்பு தரிசனம்
காரைக்காலை அடுத்த புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், சனிப்பெயர்ச்சி விழா முடிந்து மூன்றாவது சனிக்கிழமையான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக் குவிந்தனர். கடந்த மார்ச் 6-ஆம் தேதி சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, அதன் பலன்கள் 48 நாட்கள் வரை நீடிக்கும் என்பதால் பக்தர்களின் வருகை அதிகளவில் காணப்படுகிறது.
இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க நளதீர்த்தத்தில் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து, அனுகிரக மூர்த்தியாகத் தனி சன்னதியில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். இன்றைய சிறப்பு தினத்தை முன்னிட்டு சனீஸ்வர பகவான் ‘வெள்ளிக்கவச’ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். சனிப்பெயர்ச்சிக்கு பிந்தைய முக்கிய சனிக்கிழமை என்பதால், புதுச்சேரி மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர்.





