இந்தியாவிற்கு எதிராகச் சதியா? அமெரிக்கர் மற்றும் 6 உக்ரைனியர்களைக் கைது செய்தது NIA – பின்னணியில் ரஷ்ய உளவுத்துறை!
ஐஸ்வால்: இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில், மிசோரம் மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, மியான்மர் கிளர்ச்சியாளர்களுக்குப் பயிற்சியளித்த புகாரில் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ வான்டைக் மற்றும் 6 உக்ரைனியர்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிரடியாகக் கைது செய்துள்ளது.
ரஷ்யா கொடுத்த ‘க்ளூ’ – முறியடிக்கப்பட்ட சதி:
இந்தக் கைது நடவடிக்கைக்கு ரஷ்ய உளவுத்துறை வழங்கிய ரகசியத் தகவல்கள் முக்கியக் காரணமாக இருந்ததாகத் தெரிகிறது. கைதானவர்கள் சுற்றுலா விசாவில் இந்தியா வந்து, உரிய அனுமதியின்றி மிசோரம் – மியான்மர் எல்லைப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அங்குள்ள இனவாரியான ஆயுதக் குழுக்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்ததுடன், ஐரோப்பாவிலிருந்து சட்டவிரோதமாக ட்ரோன்களை இறக்குமதி செய்து வழங்கியதையும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக NIA நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முக்கியப் பின்னணித் தகவல்கள்:
- ஷேக் ஹசீனாவின் எச்சரிக்கை: 2024 ஆகஸ்டில் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு, “வங்கதேசம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மியான்மரின் சில பகுதிகளை இணைத்து ஒரு புதிய கிறிஸ்தவ நாட்டை உருவாக்க அமெரிக்கா சதி செய்கிறது” என அன்றைய வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா எச்சரித்திருந்தார்.
- மிசோரம் முதல்வர் குற்றச்சாட்டு: கடந்த ஆண்டே மிசோரம் முதல்வர் லால்டுஹோமா, “மேற்கத்திய உளவு அமைப்புகள் மற்றும் உக்ரைன் போர் வீரர்கள் மிசோரம் வழியாக மியான்மருக்குள் ஊடுருவுகின்றனர்” எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
- UPA காலத்து விதிகள்: கடந்த 2011-ல் சுற்றுலா மேம்பாட்டிற்காக மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் பகுதிகளில் கொண்டுவரப்பட்ட ‘பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதி’ (PAP) தளர்வுகளே, இத்தகைய கூலிப்படையினர் ஊடுருவப் பாதையாக அமைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா – உக்ரைன் ரியாக்ஷன்:
இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமெரிக்கத் தூதரகச் செய்தித் தொடர்பாளர், “கைது நடவடிக்கையை அறிவோம், ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கூடுதல் தகவல்களைத் தர முடியாது” எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக், இந்திய வெளியுறவு அமைச்சகத்தைச் சந்தித்துத் தங்கள் நாட்டுப் பிரஜைகளை விடுவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் எச்சரிக்கை:
சமீபத்தில் டெல்லியில் பேசிய அமெரிக்கத் துணைச் அமைச்சர் கிறிஸ்டோபர் லண்டாவ், “சீனாவைப் போல ஒரு போட்டியாளராக இந்தியா வளர்வதை அமெரிக்கா அனுமதிக்காது” என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்ததாக UAPA சட்டத்தின் கீழ் இந்த 7 பேரும் கைது செய்யப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் சர்மா, கைதான 7 பேரையும் 11 நாட்கள் NIA காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.









