பிபா உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 5-வது ஆப்பிரிக்க அணி – கானா
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு, கானா அணி தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் கானா, உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற ஐந்தாவது ஆப்பிரிக்க நாடாக மாறியுள்ளது.
தகுதி சுற்றுப் போட்டியில், கானா அணி கொமொரோஸ் அணியை எதிர்கொண்டு அக்ராவில் மோதியது. கடுமையான ஆட்டத்தில் கானா 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 47வது நிமிடத்தில், முகமது குடுஸ் அடித்த ஒரே கோல் அணிக்குத் தீர்க்கமான வெற்றியை பெற்றுத் தந்தது.
இந்த வெற்றியுடன், கானா அணி ‘ஐ’ பிரிவில் 25 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. இதன் மூலம் 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதியை உறுதி செய்துள்ளது.
இதற்கு முன், அல்ஜீரியா, எகிப்து, மொராக்கோ, துனிசியா அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. இப்போது கானா அவற்றின் அணிவகுப்பில் இணைந்து, உலகக் கோப்பையில் ஆப்பிரிக்காவின் பிரதிநிதியாக பங்கேற்கவுள்ளது.